Monday, September 17, 2018

திபெத்திய நாடோடிக் கதை- கழுகின் அலட்சியம்

திபெத்திய நாடோடிக் கதை!: கழுகின் அலட்சியம்!  By - ஆதினமிளகி, வீர சிகாமணி  |

ஒரு மரத்தில், சிட்டுக்குருவி ஒன்று கூடு கட்டி மூன்று முட்டைகள் இட்டது. அதில் மரத்தில் வாழ்ந்து வந்த ஒரு பச்சைப் பாம்பு இரண்டு முட்டைகளைத் தின்றுவிட்டது. அதனால் மனம் உடைந்து போன குருவி பறவைகளின் ராணியான கழுகிடம் போய், ""என் முட்டைகள் இரண்டை ஒரு கொடிய பச்சைப் பாம்பு தின்றுவிட்டது. அதனால் நான் இரண்டு அழகிய குஞ்சுகளை இழந்துவிட்டேன். அந்தப் பாம்பை தண்டிக்க வேண்டும்,'' என்று துயரத்தோடு முறையிட்டது.
சிட்டுக்குருவி மிகச் சிறிய பறவையானதால் அதன் கஷ்ட நஷ்டங்களையும், துயரத்தையும் ஒரு பொருட்டாகவே கருதவில்லை கழுகு.
""இவ்வளவு தானா? இந்த அற்ப விஷயத்துக்கா இவ்வளவு ஆத்திரப்படுகிறாய்? உன் குஞ்சுகளையோ, முட்டைகளையோ நீதான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். மற்றவர்கள் பாதுகாப்பார்களா... போ... போ!'' என்று சொல்லியது கழுகு.
""நீ பறவைகளின் ராணி என்பதால் தான் உன்னிடம் வந்து முறையிட்டேன். நீயோ என்னைக் கேவலமாக நினைத்து உன் கடமையைச் செய்ய மறுக்கிறாய். அற்ப விஷயத்தைச் சரி பண்ணாமல் விட்டு விட்டால், அது பெரிய நாசத்தையே உண்டு பண்ணி விடும். அம்மாதிரி பெரிய விபரீதம் எதுவேனும் நடக்குமாயின் என்னைக் குற்றம் சொல்லாதே,'' என்று எச்சரித்துப் பறந்து சென்றது.
கழுகோ அதைத் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை.
குருவி ஆத்திரத்துடன் திரும்பி வந்து ஒரு புல்லைப் பிடுங்கி வைத்துக்கொண்டு மறைவாக உட்கார்ந்தது. மீதியுள்ள முட்டையைத் தின்பதற்குப் பச்சைப் பாம்பு வந்தது. உடனே குருவி புல்லினால் பாம்பின் கண்ணைப் பலமாகக் குத்திவிட்டது. பச்சைப் பாம்பு வேதனையால் துடித்து, கீழே குளத்தங்கரையில் தூங்கிக் கொண்டிருந்த ஒரு சிங்கத்தின் மூக்கில் விழுந்து, மூக்குக்கு உள்ளேயும் நுழைந்து விட்டது.
சிங்கம் பதறியடித்துக் கொண்டு எழுந்தது. பாம்பு மூக்கைக் குடையவே சிங்கம் மிரண்டு போய்க் குளத்தில் குதித்தது. அப்போது அந்தக் குளத்தில் கிடந்த ராட்சஸ நாகம் - அதற்குப் பறக்கும் சக்தியும் உண்டு. சிங்கத்தைக் கண்டு பயந்து, குளத்தை விட்டுப் பறந்து விட்டது. அது பறந்து சென்ற வேகத்தில், கழுகின் கூட்டை மோத, அதன் உள்ளே இருந்து கழுகு முட்டைகள் உடைந்து விட்டன.
கழுகு மிகுந்த கோபத்துடன், ""நீ ஏன் குளத்தை விட்டு வந்தாய்? இங்கே வந்து என் முட்டையை ஏன் உடைத்தாய்?''என்று கேட்டது.
""நான் என்ன செய்வேன்?   சிங்கம் குளத்தில் குதித்தது. அதைக் கண்டு பயந்து பறந்து வரும்போது உன் முட்டையைத் தெரியாமல் உடைத்து விட்டேன்,'' என்றது பாம்பு.
கழுகு சிங்கத்திடம் போய், ""நீ குளத்தில் குதித்ததால்தானே ராட்சஸ நாகம் என் கூட்டில் மோதி முட்டையும் உடைந்தது? நீதான் குற்றவாளி,'' என்றது.
சிங்கமோ, ""என் மூக்கில் ஒரு பச்சைப் பாம்பு விழுந்து குடைந்தது. மிரண்டு போய்க் குளத்தில் குதித்தேன். நான் எப்படிக் குற்றவாளியாக முடியும்?'' என்றது.
பிறகு பச்சைப் பாம்பைக் கழுகு குற்றம்சாட்டவே, அது சிட்டுக் குருவியின் மேல் பழியைப் போட்டு, குருவி தன் கண்ணைக் குத்தியதால் மரத்திலிருந்து வேதனையோடு கீழே விழுந்ததாகவும், அப்போது சிங்கத்தின் மூக்கை ஒரு பொந்து என்று நினைத்து, உள்ளே புகுந்து விட்டதாகவும் சொன்னது.
கடைசியில் குருவியை விசாரித்தது கழுகு. குருவி பின்வருமாறு சொன்னது:
""அற்பமான விஷயத்தைச் சரி செய்யாமல் விட்டு விட்டாய். பெரிய ஆபத்து உண்டாகும் என்று அப்போது எச்சரித்தேன். நீ கேட்கவில்லை; உன்னுடைய அலட்சியத்தினால் உன் குஞ்சை இழந்துவிட்டாய். அதற்கு என்னைக் குற்றம் சாட்டுவது எப்படி நியாயமாகும்? உன் குஞ்சுகளை நீதான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
மற்றவர்கள் எப்படிப் பாதுகாப்பார்கள்?''
கழுகு பதில் பேச முடியாமல் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு அவ்விடத்தை விட்டுப் பறந்தது.

 நன்றி, தினமணி இணைய இதழ்

No comments:

Post a Comment